உன்னால் உணர்ந்தவை

Sunday, December 13, 2009.
மன்னார் அமுதன்

துக்கத்தை
உணர்ந்திருக்கிறாயா?
கறுப்பா ? சிவப்பா ?
என்கிறாய்

முதன் முதலாய்
வெற்றிலையிடுகையில்
கொட்டைப்பாக்கின் துவர்ப்பு
தொண்டைக்குள் அடைக்குமே
சுவைத்திருக்கிறாயா..?

மேல் நெஞ்சிலோர்
முழுமீன் ஓடி
சதைகள் செரித்து விட
நடுமுள் மூச்சடைப்பதாய்
உணர்ந்திருக்கிறாயா..?

முட்டிக் கால்கள்
மூர்ச்சையாகி
உடல் வலு தாங்காமல்
சாய்வதற்கு சுவர் தேடுமே
சாய்ந்துள்ளாயா..?

மேலும் கீழும்
இரத்தம் ஓடினாலும்
கைகள் மட்டும்
காற்றுப் போன பலூனாய்
தொய்ந்து போகுமே
அதுதான் துக்கம்

அதைத் தராமல்
நீ கொண்டதில்லை தூக்கம்

உனக்கான காத்திருப்பில்
மனம் லயித்தே
காலம் கழிக்கிறேன்

தாமதித்தே வருவாயென
தெரிந்திருந்தும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
நேரத்திற்கே பிரசன்னமாகிறேன்

உன் வருகை
பிழைக்கையில் தான்
ஏதோ பிசைகிறது

அதைத்தான் துக்கமென்கிறேன்..
நீயோ
கறுப்பா ? சிவப்பா ?
என்கிறாய்

Comentários:

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |