காதல் வெண்பனி

Sunday, December 13, 2009.
வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

பூவினக் காதல் உணர்வால்
காவிரியாகும் நாளங்கள் பூச்சொரியும்.
சாவியாகிச் சாதனைக்கு உரமாகும்.
காவியங்கள் குவிக்கும் சஞ்சீவி.
பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.
பவித்திரமாய் உயிரை உசுப்பும்
தெவிட்டாதது. சொல்லித் தெரியாக்கலை.
ஆவியின் ஐவதுளி காதல்.

காதற் கதகளி அரங்கேறாவிடில்
காட்டுவழிப் பாதை ஆகும்.
கூட்டுக் களி வெறுப்பாகும்.
மோட்டு வளைப் பார்வையாகும்.
ஏட்டுப் படிப்பு எகிறிவிடும்.
தீட்டென்று விலக்கு மோதலை!
தேட்டம் கொள்ளு காதலில்!
பாட்டை மாற்று, அற்புதம் காண்பாய்!

1 Comentário:

Anonymous said...

நன்றி சகோதரரே! எனது வலைப் பூவையும் காணுங்கள். கூகிள் மூலம் இதைக் கண்டேன் வாழ்த்துகள்.
Vetha.Elangathilakam.
Denmark.

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |