மனிதம்

Sunday, December 13, 2009.
சாந்தி தங்கராஜா

மனிதம் மதிக்கப்படாவிட்டாலும்
மிதிக்கப்படாதிருக்கட்டுமே
மானுடம் போற்றப்படாவிட்டாலும்
தூற்றப்படாதிருக்கட்டுமே
மனிதன் உறைவிடம் இல்லாதிருந்தாலும்
உயிரோடு வாழட்டுமே
மங்கையர் மணமாலை சூடாவிட்டாலும்
மானத்தோடு வாழட்டுமே
மழலைகள் மண்ணுக்குள் புதையாமல்
தாய் மடியில் உறங்கட்டுமே

ஆழிப் பேரலையில் அடிபட்ட உறவுகளுக்கு
மீண்டும் ஒரு கறுப்பு ஜுலையா?
வேண்டாம் கண்ணின் மணிகூட
எமக்கினி கறுப்பாக வேண்டாம்
கருமைக்கு முடிவுகட்டி
வெண்மை ஒளிர்ந்திட
வெண்புறாக்கள் பறந்திட
ஒன்றுபடுவோம்

இன்றிந்த விதியை யாரவன் எழுதி வைத்தான்
தங்கள் சின்னக் கூடுகளுக்குள் சிதறிய சிரிப்பொலிகளுடன்
பட்டுச் சட்டை அணிந்து சிட்டெனப் பறந்த அந்தச் சின்னத் தளிர்கள்
வட்டமிடும் கழுகுகளால் நோட்டமிடப்பட்டு
காரிருள் வேளையில் துண்டாடப்பட்டு
இன்று புதைகுழிகளில் அந்தப்
ப+க்களின் உறக்கம்
மானுடமே உன்னைத் தட்டி எழுப்பவில்லையா
எங்கள் பிஞ்சுகளின் அவலநிலையும் அவதிநிலையும்

இனியொரு விதி செய்வோம் என்றெழுதிய
பாரதி இன்றிருந்தால்
இன்றமைந்த இவ்விதிக்கு என்ன செய்திருப்பான்

ஆண்டவன் அடி தொழுது
அல்லும் பகலும் கருவிற் சுமந்து
அன்பாய்ப் பெற்றெடுத்து
ஆரமுது ஊட்டிய
அன்னையும் இங்கில்லை
மகவும் இன்றில்லை

பெற்றோரின் புன்னகை தெரியுமுன்
வாழ்வின் வாசனை அறியுமுன்
புத்தம் புது மலர்கள்
புதைகுழிகளில் வீழவோ
இன்றிந்த விதியை
யாரவன் எழுதி வைத்தான்.

Comentários:

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |