நான் மட்டும் இல்லையென்றால்....
மன்னார் அமுதன்
காலச் சக்கரத்தின்
கோரைப் பற்களில் சிக்கி
ஏதோவொரு மணித்துளியில்
நானும் மாண்டு போவேன்
என்றும்
சுற்றும் பூமி சுற்றும்
வெடித்த மொட்டு மலரும்
அஸ்தமனத்தின் பின்னரான
முன்னிரவில்
நிலா முளைக்கும்
அன்றும்
நீரில்லா நிலவில்
மாவரைத்து
வடை சுடுவாள் பாட்டி
சூரியனும்
கிழக்கே தான் உதிக்கும்
மேற்கே உதித்தாலும்
மறக்காமல்
நமக்கெல்லாம் வியர்க்கும்
மூன்றாம் நாட்களில்
காய்ந்து போன
ஆற்றின் சுவடாய்க்
கண்ணீர் வற்றிவிட
அவரவர் செயல் நோக்கி
சிந்தனைத் தூண்டல்களுடன்
உறவுகள் பறக்கும்
எட்டாம் நாளில்
ஒருமுறையும்...
முப்பத்தியொன்றாம் நாளில்
மறுமுறையும்...
அவர்களின்
செத்த நாக்குகளையும்
சொந்தங்களையும்
உயிர்ப்பிக்கும்
எனக்கான நினைவுகூறல்கள்
ஒருபொழுதில்
எனக்குப் பிடித்தவற்றை
விட்டுக் கொடுக்காதவர்கள்
தானே முன்வந்து
படையிலிடுவார்கள்
என்னைப் பிடிக்குமென்று
வாழ்கையில்
வாழ்த்தத் தெரியாதவர்க்கெலாம்
வாய்ப்பளித்து
வாய்மூடிக் கிடப்பேன்
நடுமுற்றத்தில்
அவர்கள் உதிர்க்கும்
பொய்களைக் கேட்க
செவியென்றும் திறந்தே இருக்கும்
மரமொன்று
வீழ்ந்துஇ காய்ந்து
கருகி மறைவதாய்
நானும் அழிவேன்
நானில்லா நிறையைச்
சமன் செய்ய
மற்றோர் தளிர் முளைக்கும்
சுற்றும் பூமி சுற்றும்
இன்னும் வேகமாய்
அன்றும் ஒருவன்
சொல்லிக்கொண்டிருப்பான்
'நானில்லையென்றால்...?'
Subscribe to:
Post Comments (Atom)
Comentários:
Post a Comment