பூங்கா!

Sunday, December 13, 2009.
அகரம்.அமுதா

நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1)

சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -மிகக்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு! (2)

திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே! (3)

விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்! (4)

அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது! (5)

மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதி பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்! (6)

பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது! (7)

சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்! (8)

போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு! (9)

முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்! (10)

ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்! (11)

கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்! (12)

நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் ப+ங்கா
புகழ்தனை இழந்து காடாகும்! (13)

விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்? (14)

சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது! (15)

Comentários:

 
VIJAYA KUMAR R R © Copyright 2010 | Design By Gothic Darkness |