வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.
நம்பிக்கையென்று வழி நடந்தபோது
நம்பிக்கையிழந்தும் மனம் சோர்வதில்லை
நங்கூரமென நீயிருப்பதால் தானே!
அனுபவக் கிரீடமென நரைகள் அணிவகுத்தும்
அகத்தில் இளமை ஆழ்வது
அருகில் நீயிருப்பதால் தானே!
கன்னித் தமிழ் மேகமாயென்னுள்ளே கவிந்து
வண்ணத் தமிழ்ச் சாரல் தூவுகிறாய்!
எண்ணக் கருவாகி நிற்கிறாயே!
கவிதைக் கனற் பொறியை நீயறிவாய்.
கவிதை காற்றாய்க் கனலாய் என்னுள்ளே
குடை விரிந்தது உன்னால் தானே!
எண்ணம் பகிர்ந்திட அருகில்
எழிலாய் நீயிருக்க என்னுள்
எறும்பின் சுறுசுறுப்பு வந்திடுமே!
போர் தொடுக்குமுலகில் அன்பின்
ஏர் கொண்டு சாரத்தியம் பண்ணும்
சீர் அறிந்தவன் நீதானே!
நிழல் குடையாய்க் கவியும்
உன் நிம்மதி வதனத்தின் அமைதியெனக்கு
நிறைவு தருமொரு சக்தி தானே!
Subscribe to:
Post Comments (Atom)
Comentários:
Post a Comment